Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

சிறப்பு இணைப்பு

இலங்கை செய்திகள்

பிந்திய செய்திகள்

உலக செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

இந்திய செய்திகள்

சினிமா செய்திகள்

சுவிஸ் தமிழர் தொலைக்காட்சி செய்திகள்

மாணவர் அரங்கம்

itr fm

தொழிநுட்ப செய்திகள்

விளையாட்டு செய்திகள்

கவிஞர் அரங்கம்

Gift2Sri

Friday, July 12, 2019

Currently online

ITR FM

Currently online

Wednesday, July 10, 2019

இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Currently online
இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 'நம்பர்-1' அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்திக்கிறது.
'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.புதியதாக கொண்டு வரப்பட்ட 'ரிசர்வ் டே' விதிப்படி இன்று மீண்டும் போட்டி தொடர்ந்து நடக்கிறது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
240 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, 5 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அமெரிக்காவில் கனமழை! இயல்பு நிலை பாதிப்பு

Currently online
Image result for american news rainஅமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் அசாதாரண கால நிலைகாரணமாக வோஷிங் டன் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வோஷிங்டன் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது. 

அடைமழை காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. அத்துடன், மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளது. 

இதனால் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Tuesday, July 09, 2019

கோத்தாவை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவார்! உதய கம்மன்பில

Currently online
கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும். 

கோத்தபாய ராஜபக்க்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எம்புல்தெனிய மெக்ரின் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

சிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். 

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து அப்படியான உதவி கிடைத்தால், மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க கூடிய விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும். அந்த கூட்டணியில் மைத்திரி பால சிறிசேனவை ஒரு கௌரவமான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கு உதவ தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ பிரதமராக வர வேண்டும். 

பிவித் துரு ஹெல உறுமய கடந்த நான்கு ஆண்டுகளாக கூறி வரும் இந்த கருத்தை முழு நாடும் தற்போது ஏற்றுக்கொண்டு விட்டது.

எமக்கு எத்தனை அமைச்சு பதவிகள் கிடைக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ளாது, ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் விரிவான கூட் டணியை ஏற்படுத்துவது குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.             

Friday, March 29, 2019

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ''தமிழரசன்'' !!

Currently online
விஜய் ஆண்டனி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தமிழரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.

சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, கஸ்தூரி, ராதாரவி, ரோபோ சங்கர்,  சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஷ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதியுள்ளார்கள். அனல் அரசு ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, பிருந்தா, சதீஷ் ஆகியோர் நடம் அமைக்கின்றனர்.

ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அத்துடன், படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட உள்ளது.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு !!

Currently online
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் வெளியாகவில்லை.

ரஷ்யா நாட்டின் எல்லைக்குட்பட்ட தொலைதூர கிழக்கு பகுதியில் சுமார் 1250 கிலோமீட்டர் நீளமுள்ள காம்சட்கா தீபகற்பம் பகுதி அமைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் மற்றும் ஒகோட்ஸ்க் கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீபகற்பம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும். இப்பகுதியில் பூர்வகுடிகள் உள்பட சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

இந் நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம் !!

Currently online
ஆரண்ய காண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த தியாகராஜன் குமாரராஜா பல வருடங்களுக்கு பிறகு இயக்கிய படம் தான் சூப்பர் டீலக்ஸ். 

இத்தனை வருட காத்திருப்பிற்கு ட்ரீட்டாக இருந்ததா இந்த சூப்பர் டீலக்ஸ், பார்ப்போம்.

கதைக்களம்
படத்தில் மொத்தம் 4 கதைகள், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையதா என்றால், அதுவும் இல்லை. ஆனால், ஒருவர் செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு நன்மையா? தீமையா? ஏன் வாழ்க்கையில் இது நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்கு வாழ்க்கை அப்படியே தான் போகும் நாம் தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.

படத்தை பற்றிய அலசல்
சூப்பர் டீலக்ஸ் இப்படத்தை கதையாக எங்கும் விமர்சனம் செய்ய முடியாது, காட்சியின் நகர்வுகளாகவே சொல்ல முடியும். 5 சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பதற்காக ரெடியாக, அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா (ரம்யா கிருஷ்ணன்) வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.

சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.

விஜய் சேதுபதி திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, இந்த சமூகம் அவரை மிக கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கின்றது.

சரி இப்போது முதல் பேராவில் சொன்ன கதைக்கு வருவோம், டிவியை உடைத்து ஒரு நண்பன் ஓடிவிட்டான், மாலைக்குள் புது டிவி வாங்க வேண்டும், இல்லையென்றால் அப்பா தன்னை கொன்றே விடுவார் என்று அச்சப்படும் சிறுவன், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு டிவி வாங்க அலைகின்றனர்.

இந்த 4 கதைகளுக்கான முடிவு என்ன என்பது தான் சூப்பர் டீலக்ஸ் என்றாலும், இந்த 4 கதைகளும் சொல்ல வரும் கருத்துகள் தான் படத்தின் ஹைலைட். அதிலும் வசனம் தான் தியாகராஜா குமாரராஜா படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ், இதில் கூடுதலாக மிஷ்கின், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

பஹத் தன் மனைவி இப்படி செய்துவிட்டாள் என்ற கோபம் ஒரு புறம் இருக்க, இதிலிருந்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார். அதிலும் ஜாதி வெறி எவ்வளவு கொடியதோ அதே போல் நாட்டு பற்று, மொழி பற்று அனைத்தும் கொடியது தான், ஜாதி வெறி தவறு என்றால் இதுவும் தவறு தான் என அவர் பேசும் வசனம் எல்லாம் செம்ம.

விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவது, வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட, அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போலிஸையே அவர் அடித்து தலையில் அடித்து சாபம் விடுவது, கடைசியில் கடவுளையே உலகம் என நம்பியிருக்கும் மிஷ்கினிடம் தன் பாவங்களை சொல்லி அழும் இடத்தில் விஜய் சேதுபதி தனித்து நிற்கின்றார்.

போலிஸ்காரராக பக்ஸ் நடித்துள்ளார், அப்படி சொல்வதை விட மிரட்டியுள்ளார், சிரித்துக்கொண்டே அவர் செய்யும் விஷயம் எல்லாம் நமக்கே பயத்தை ஏற்படுத்துகின்றது, அவர் மேல் கடும் கோபத்தையும் உண்டாக்குகின்றது, ஒரு இடத்தில் ‘என் பொண்டாட்டி பத்தினி அவ சாபமே பலிக்காது, இவ சாபம் எங்க பலிக்கும்’ என்று விஜய் சேதுபதியை கிண்டல் செய்துவிட்டு அடுத்த காட்சியிலேயே பக்ஸுக்கும் நடக்கும் விஷயம், அதே போல் தன் கள்ள உறவு வைத்திருந்த தன் மனைவி சமந்தாவை பார்த்து பஹத் ஆமா இவ பெரிய பத்தினி இவ சொன்னா கரெண்ட் வந்துரும் பாரு, என்று சொல்லி முடித்ததுமே கரெண்ட் வருவது என தியாகாராஜா குமாரராஜா டச் பல இடங்களில் ஜொலிக்கின்றது, குறியீடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

மேலும், படத்தில் டிவிக்காக அலையும் அந்த மூன்று சிறுவர்கள், அற்புதம் செய்துள்ளனர், அத்தனை பிரச்சனைகளிலும் கேஷுவலாக இருப்பது, ‘ஏன் காஜி நீ ஏண்டா இவ்வளவு காஜியாக இருக்க’, அதெல்லாம் முடியாது எல்லாம் முடிஞ்சுருச்சு இப்ப நா பிட்டு படம் பாக்கனும் என்று சொல்வது என கலக்கியுள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக வந்தாலும், கடைசியில் லட்சம் பேர் ஆபாச படம் பார்க்கின்றனர், அவர்களுக்கு இல்லாத குற்ற உணர்வு அதில் நடித்த எனக்கு ஏன் வரவேண்டும் என அவர் சொல்லும் இடம் சிறப்பு.

க்ளாப்ஸ்
படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு ஒரு காட்சிக்கு இசை தேவையா என்ற புரிதலே சிறப்பு, அதுபோல் எங்கு இசை வரவேண்டும், அது எப்படி வரவேண்டும் என்பதை உணர்ந்து யுவன் அதகளம் செய்துள்ளார். அதிலும் கேங்ஸ்டர் ஒரு சிறுவனை துரத்த, அங்கு மாங்குயிலே பூங்குயிலே பாடல் போல் இசையமைத்தது எல்லாம் க்ளாஸ், அதே நேரத்தில் சமந்தா, பஹத் பாசில் காட்சிகள் எல்லாம் இசையே நமக்கு பயத்தை கடத்துகின்றது.

படத்தின் ஒளிப்பதிவு, பல கலர்ஸ் படத்தில் வந்து செல்கின்றது, படம் முழுவதுமே வெளிச்சமாக இருந்தாலும், அத்தனை துல்லியமாக ஒவ்வொரு காட்சியும் உள்ளது.

பல்ப்ஸ்
அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்குமா என்றால் கேள்விக்குறி தான், அதே நேரத்தில் சினிமாவை விரும்புவோர்களுக்கு செம்ம ட்ரீட்.

மொத்தத்தில் சூப்பர் டீலக்ஸ் சொல்ல வருவது வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் என்பதே, தமிழில் ஒரு உலக சினிமா.

ஹெச்.ராஜா கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி ; மு.க.ஸ்டாலின் ஆவேசம் !!

Currently online
இந்தியாவிலேயே ஹெச்.ராஜாவைப் போன்ற அயோக்கிய அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(29), சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தையும், மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார்.

"வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஹெச்.ராஜாவை எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்கவும் முடியாது.

தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக்கொண்டிருப்பது தான் ஹெச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

பாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் ஹெச்.ராஜா.

இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்குப் போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம். நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை !!

Currently online
ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பெப்ரவரி 14ம் திகதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். 

அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேர் கொண்ட வீரம்...............!!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
நேர் கொண்ட எம் வீரம் 
ஓயாது ஒரு நாளும்
சீர் கொண்ட எம் தேசம் 
பணியாது பகை கண்டு!

காலங்கள் மாறினாலும்
கனவுகள் ஓய்வதில்லை
கோலங்கள் நேர் எதிரே
கொள்கைகள் மாறுவதில்லை!

வாள் கொண்டு நாம் செய்த 
யாகங்கள் மறக்கவில்லை 
வாளோடு எம் வாழ்வு 
வல்லமைகள் மாறவில்லை!

உலகையே ஆண்ட இனம்
உள்ளுக்குள் அழுவதுவோ
உரிமைகள் ஏதுமின்றி 
ஊனமாகி திரிவதுவோ!

பெரு திசை நான்கிலும் 
பெயரை ஒலிக்க செய்வோம்
பார் எங்கும் தடம் பதித்து
மீண்டும் தலை நிமிர்வோம்!

          நன்றி 
கூடலூர் சிந்துஷன்

காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு ; ஆய்வில் தகவல் !!

Currently online
காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

'அன்றாடப் பணிகள்' என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப்பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. ` பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!', `ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்', `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்'... திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது. 

நம்மில் சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவோம். அப்படி தவிர்ப்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது குறித்து சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரிடம் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர். நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 

நீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் குழந்தை பிறந்து 26வது நாளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் !!

Currently online
வங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26வது நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.

வங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பெப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.

இந் நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் திகதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.

அங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.

இதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. 

முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.

இரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும். 

இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பபையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்னீர் பக்கோடா செய்யலாமா ?

Currently online
தேவையான பொருட்கள்

பன்னீர் – 2 கப்
கடலை மா – 2 கப்
சாட் மசாலாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
சோள மா – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், தண்ணீர் – உப்பு – தேவையான அளவு


செய்முறை

பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கடலை மா, சோள மா, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பன்னீர் பக்கோடா ரெடி.

பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல ஓட்டும் மிக முக்கியம் !!

Currently online
நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. 

இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று தருமபுரியில் உள்ள அரூர்  பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஹட்ரோ கார்பன், நெடுவாசல், விவசாயம் பாதிப்பு ஆகியவற்றிற்கு தற்சமயம் ஆட்சியில் இருப்போர் ஒருமுறை கூட வந்து மக்களைப் பார்க்கவில்லை. ஒட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அதனால் பணத்துக்கு ஓட்டுப்போட வேண்டாம். 

பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப் போல ஓட்டும் மிகமுக்கியம் எனவே ஓட்டை விற்க வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் ; ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை !!

Currently online
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் இன்று மோதுகின்றன.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய 12வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சர்சைகளையும் தாண்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இன்றைய போட்டியில், கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்த, ஐதராபாத் அணியும், பஞ்சாப்பிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் தோல்வியடைந்த போட்டியில் போராடியே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளையும் படுலேசில் எடைப் போட வேண்டாம். சென்ற போட்டியில் காயத்தால் விளையாட ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இன்று விளையாடுவார் என்று தெரிகிறது. ஓராண்டு தடைக்கு பிறகு, அணிக்கு திரும்பி கடந்த ஆட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் வார்னர், அதே அதிரடியை இன்றும் தொடங்கினால், ராஜஸ்தானுக்கு ஆபத்தாகிவிடும்.

ஜோஸ் பட்லரை  'மன்கட்' முறையில் அஸ்வின் செய்த ரன்-அவுட்டால் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான்  தோல்வியடைந்து. இது அந்த அணி வீரர்களுக்கு கடுப்பை ஏற்றியது. அதிலிருந்து மீண்டு(ம்) வந்து, இன்றைய போட்டியில் வெற்றி பெற ஸ்மித், பட்லர், ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினால், போட்டி சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 9 முறை மோதியுள்ளன. இதில், ஐதராபாத் 5 முறையும், ராஜஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு !!

Currently online
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார். 

அத்துடன் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் அதில் செல்வோரும் என சுட்டிக் காட்டியுள்ளார். 

இதேவேளை நடை பயணிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குய்ப்ப்பிடத்தக்கது.

சா/ தர பெறுபேறுகளுக்கமைய 71 சதவீதத்திற்கு மேலானோர் உயர்தரம் கற்க தகுதி !!

Currently online
நேற்று வெளியான 2018ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தோற்றிய பரீட்சார்த்திகளில் 71 சதவீதத்திற்கு மேலானோர், உயர்தர வகுப்புகளில் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் ஒன்பதாயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களுக்கும் ஏசித்தி  பெற்றுள்ளனர்.

உலகிலேயே மிக நீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு !!

Currently online
உலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர்.

சாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்கிறது. இது சுமார் 10 கி.மீட்டர் (6.5 மைல்) நீண்டு கிடக்கிறது. 

குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குகின்றன. குகையின் சுவர்களில் படிந்து கிடக்கின்றன. அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிகிறது.

ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இவற்றை கண்டுபிடித்தனர்.

தற்போதுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் இருக்கும் என கணக்கிட்டனர். 2006-ம் ஆண்டில் தெற்கு ஈரானின் கெசிம் தீவில் இருந்து 6 கி.மீட்டர் தூரத்தில் குகை இருப்பதையும், அதற்குள் உப்பு பாறை படிமங்களாக இருப்பதையும் அறிந்தனர். 

சா /தரப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு !!

Currently online
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) வெளியாகின.

இந்நிலையில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த நடவடிக்கைக்காக, எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பத்திரிகை விளம்பரங்களை பின்பற்ற வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேருக்கு 9A சித்தி !!

Currently online
பரீட்சைகள் திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(28) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.

பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி, நிலக்னா வர்ஸ வித்தான அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

விசேடமாக இரண்டாவது இடத்தை மூன்று பேர் பெற்றுள்ளனர்
விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதி, 
கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி, 
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா 

ஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.

ஆறாவது இடத்தை ஐந்து பேர் பெற்றுள்ளனர். 
கொழும்பு தேவி பாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயக, 
கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோண், 
கொழும்பு ரோயல் கல்லூரியின் சேர்ந்த மாணவன் கவிரு மெத்னுக்க, 
காலி மஹிந்த கல்லூரியின் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகே ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகா

நாளை காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு !!

Currently online
நாளை(30) காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் மின்சார விநியோகம் துண்டிப்பு காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, கோட்டே, தெஹிவளை, கல்கிஸை, கடுவெல, மஹரகம, இரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.