Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 03, 2018

ஐ.பி.எல் கிரிக்கெட் ; ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்த டெல்லி !!

Currently online
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பழிதீர்த்தது.

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பீல்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் சோதி, மஹிபால் லோம்ரார் நீக்கப்பட்டு டார்சி ஷார்ட், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டெல்லி அணியில் ராகுல் திவேதியாவுக்கு பதிலாக ஷபாஸ் நதீம் இடம் பெற்றார். போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டம் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, காலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் காலின் முன்ரோ (0) தவால் குல்கர்னி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷாவுடன் இணைந்தார். முதல் ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது.

2-வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரி விரட்டி தனது ரன் வேட்டையை தொடங்கினார். 3-வது ஓவரில் தவால் குல்கர்னி பந்து வீச்சில் பிரித்வி ஷா 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். 5-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் பிரித்வி ஷா அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்பிளேயில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை ஸ்ரேயாஸ் கோபால் மெதுவாக வீச அதில் ஏமாந்த பிரித்வி ஷா (47 ரன்கள், 25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன்) அவரிடமே எளிதாக கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 7.2 ஓவர்களில் 74 ரன்னாக இருந்தது.

அடுத்து ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் அடித்து ஆடியது. 10.1 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 166 ரன்னாக உயர்ந்த போது 4-வது அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் (50 ரன்கள், 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து மேக்ஸ்வெல் களம் கண்டார். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பான்ட் (69 ரன்கள், 7 பவுண்டரி, 5 சிக்சருடன்) ஜெய்தேவ் பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 172 ரன்னாக இருந்தது. ஒரே ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து விஜய் சங்கர், மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய விஜய் சங்கர் 6 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் (5 ரன்) ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டது. அப்போது பிளங்கெட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மழை நின்றதும் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் புதிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டார்சி ஷார்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஜோஸ் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடி டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 18 பந்துகளில் அரை சதம் அடித்த ஜோஸ்பட்லர் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஸ்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட் 44 ரன்னில் (25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) அவுட் ஆனார்.

இருவரும் நல்ல தொடக்கம் அளித்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் அதனை பயன்படுத்தி கொள்ளாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 12 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.