
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கிராமம் கருப்பட்டி அம்மச்சியாபுரம் சேர்ந்தவர் அஜீத்குமார். இவருக்கு பாண்டிச்செல்வி என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கிஷோர்குமார் என்ற 8 மாத குழந்தையும் உள்ளது.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத்குமாரை பிரிந்து சென்றுவிட்டார் பாண்டிச்செல்வி. நான்கு மாதங்களாக அவரது தாய் வீட்டில்தான் இருந்து வருகிறார். 4 மாதங்களாக மாமியார் வீட்டுப் பக்கமே போகாத அஜீத்குமார், கடந்த 3 நாட்களாக அங்கேயே போய் வந்துகொண்டிருந்தார். மருமகன்தானே வீட்டுக்கு வருகிறார் என்று மாமியாரும் எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று மதியம் தன்னுடைய நண்பருடன் அஜீத்குமார் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு அந்த நண்பருடன் மாடிக்கு சென்றார். சிறிது நேரத்தில், கீழே இறங்கி வந்த அஜீத்குமார், மாமியாரிடம், குழந்தை திடீரென்று மயங்கிவிட்டதாக சொன்னார். இதனால் பதறிப்போன மாமியாரும், பாண்டிச்செல்வியும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அதன் கழுத்தில் காயங்கள் உள்ளன என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் அஜீத்குமாரிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது "4 மாதம் பிரிந்து சென்ற பாண்டிச்செல்வி எப்படியும் திரும்பி வர போவதில்லை என்பதால் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தேன். அதற்கு குழந்தை தடையாக இருக்கும் என்பதால் கழுத்தை நெரித்து கொன்றேன், அதற்காக என் நண்பரை துணைக்கு அழைத்து வந்தேன்" என்றார்.
இதையடுத்து அஜீத்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
2வது திருமணம் செய்ய பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் சோழவந்தான் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2வது திருமணம் செய்ய பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் சோழவந்தான் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.