தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். 28 000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மழை, வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாயும், வீடிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். முதல்வர் நிவாரண நிதி திட்டத்துக்கு அவர்கள் இந்த நிதியை வழங்கியுள்ளனர்.