உனை தொட்டு அணைக்க
என்றும் தவறவில்ல
தூரத்தில் நீ இருந்தாலும்
தொட்டில் பாசம் மாறவில்லை
நல்லா_இருக்கிறியா_ராசா_
சின்ன சின்ன ஆசையெல்லாம்
சிதைந்து போய் கிடக்குதைய்யா
உன் அழைப்பை எதிர்பார்த்து
செவி இன்னும் விழிக்குதைய்யா
உன் முகத்தை தினம் பாக்க
இமைக் கதவும் துடிக்குதைய்யா
வயதுக்கு வந்திட்டாய்
திருமணம் பண்ணி வைச்சிட்டன்
எனக்கு வயசாகிப் போட்டுதைய்யா
செத்திடுவன் போலிருக்கு
நீ நல்லா இருக்கிறியா
அது போதும் இந்தக் கட்டைக்கு
பாசத்தில அடிச்சிருக்கன்
உனை நல்லவனா வளர்த்திருக்கன்
பகுத்தறிவு கற்றிருக்க
பக்குவத்த புரிந்திருக்க
நீ நல்லவனா இருந்திடனும்
நாளு பேரு மதித்திடனும்
இது எனது ஆசை ராசா
அம்மாவ நினைத்து நீ
கவலையேதும் பட்டிடாத
குடும்பத்தை தினமும் நீ
நல்லபடி காத்திடைய்யா
ஒரு ஆசை உண்டு ராசா
உனக்கோ சோறூட்ட
எத்தனை பொய் சொல்லிருக்கன்
நான் கண் மூடும் முன்
ஒருவாட்டி சோறூட்டி விடுவாயா
என் மடியில் நீ தூங்கி
மறு வாழ்வு தருவாயா
நான் இறந்து இன்றே
கட்டையில போனாலும்
என் ஊசிச் சட்டையில
என்றும் நீ இருப்ப
நல்லா இருக்கிறியா ராசா
வேளைக்கு சாப்பிடைய்யா
வெய்யில்ல நிக்காத
மழைத் துளியில் நனையாத
குளங்களுக்குப் போகாத
குறும்புகளும் செய்யாதே
நீ வளர்ந்ததே தெரியவில்ல
அன்று நீ கை பிடிச்சு
பள்ளிக்கு வருகையில
ஓடிப் போய் ஒளிவாயே
அந்த நினைவே வருகுதைய்யா
உனக்கு வேலைக்கு நேரமாச்சு
தொந்தரவு செய்யவில்ல
நீ நல்லா இருந்திடனும்
இது அம்மாவின் ஆசை ராசா
நன்றி
வன்னியூர் கிறுக்கன்