
உயிரிழந்த குழந்தை மூன்று நாட்கள் உயிருடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட சம்பவம் யாழ்.குடாநாடு மாத்திரமன்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் காட்டுத் தீ போலப் பரவியிருந்தது.
இந்த நிலையில் குறித்த குழந்தை தற்போது நாயின் உருவில் வந்துள்ளதாக வெளியான தகவல் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட மானிப்பாய் பிப்பிலி மயானத்திலுள்ள நினைவிடத்தில் குழந்தையின் குடும்பத்தவர்கள் இணைந்து குறிப்பிட்ட தினங்கள் வரை பாலூற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை உயிரிழந்து 8வது நாள் வழமை போன்று அதிகாலை வேளையில் நினைவிடத்தில் பாலூற்றுவதற்காக குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் சென்றுள்ளனர்.
மயானத்திற்குச் சமீபமாக நீர் அள்ளுவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியிலிருந்து கீழே இறங்கிய போது திடீரென அவ்விடத்திற்கு வந்த கறுப்பு நிற நாயொன்று அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அவர்கள் முச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்த போது இறந்த குழந்தையின் தாயின் மடியில் ஏறி அமர்ந்துள்ளது.
எனினும், முன்னர் அறிமுகமில்லாத காரணத்தால் நாயை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் செல்ல முயற்சித்த போதும் குழந்தையின் தாய், தந்தை மற்றும் பேர்த்தியாரின் மடியில் மாறி ஏறி அமர்ந்து அங்கிருந்து தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்ற வகையில் நாயின் செயற்பாடுகள் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குறித்த நாயைத் தம்முடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்கள். தற்போது குறித்த நாய் இரவு வேளைகளில் குழந்தையின் பெற்றோருக்கு அருகிலேயே உறங்குவதுடன் குழந்தை உயிருடனிருந்த போது செயற்பட்ட விதம் போன்றே அதனுடைய பல்வேறு செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தை ஒரு முச்சக்கர வண்டிச் சாரதியாகவுள்ள நிலையில் அவர் தொழில் நிமிர்த்தமாக வெளியே செல்லும் போது குறித்த குழந்தை தானாக முச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்து குறிப்பிட்ட தூரம் வரை செல்வதை உயிருடனிருக்கும் போது வழமையாகக் கொண்டிருந்தது. இதேபோன்று குறித்த நாயும் செயற்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குடும்பத்தவர்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட மயானத்திற்குச் செல்லும் போது இந்த நாயும் முச்சக்கர வண்டியில் ஏறிச் செல்கிறது.
அதுவும் உயிரிழந்த குழந்தையின் மடியிலும், பேர்த்தியாரின் மடியிலும் மாறி மாறி அமர்ந்து செல்கிறது. பின்னர் மயானத்திற்கு அருகிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டியாகச் செல்லும் குறித்த நாய் நினைவிடத்தைப் பல முறை சுற்றிச் சுற்றியும் வருகின்றது.
நாங்கள் வளர்த்த நாய் கூட இது போன்று எங்களுடன் இதுவரை செயற்பட்டதில்லை. இந்த நாயின் செயற்பாடுகளைப் பார்த்த பலரும் குழந்தையின் உயிரிழப்பில் மர்மங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்
மொத்தத்தில் எங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் போலவே இந்த நாயின் செயற்பாடுகளும் அமைந்துள்ளமையால் எங்கள் அம்மு எங்களை விட்டுப் போகவேயில்லை. அவள் மறுஜென்மம் எடுத்து வரப் போறாள்.
விரைவில் வருவாள் எனவும் அவர்கள் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்.