
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற பொது ஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது ;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரியே 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குக் கேட்டனர்.
எனினும், மேலதிக அதிகாரங்கள் எதுவும் பெறாமலே வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதன் பின்னர் எதுவும் இல்லாமல் போகிறது.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தேர்தலை நடத்தினார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்காது என அரசாங்கத்தில் இருந்த பலரும் எச்சரித்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ அங்கு தேர்தலை நடத்தினார்.
வடக்கு மக்களுக்கு அவர் பெற்றுக் கொடுத்த ஜனநாயக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்பொழுது பறித்துவிட்டனர். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது மக்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது என்று ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.