Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு !!

Currently online
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைக்கு ஒரு வாரத்தில் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்குமான தீர்வு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதே என்றும் அந்தத் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நாட்டின்  நெருக்கடி நிலைக்குத் தாம் காரணம் அல்லவென்றும் ரணில் விக்கிரமசிங்கவே முழுக்காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது ;

பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களது கையெழுத்தைக் கொண்டு வந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் இந்நாட்டின் பிரதமராக்கப்போவதில்லை.

நாட்டில் அரசியல் போராட்டம் ஒன்று கிடையாது. அரசியல் நெருக்கடியே உள்ளது. அந்த நெருக்கடி உருவாகுவதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்கவே

2015ஆம்ஆண்டில் எமக்கு வாக்களித்த 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். 2014இல் நவம்பரில் நான் எடுத்த தீர்மானமும் கடந்த ஒக்டோபரில் நான் எடுத்த தீர்மானமும் மிகச் சரியானவையே. அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டுக்குத் தேவையான தீர்வே அது.

நாட்டின் ஊழல் மோசடிக்கு எதிராகவும் திருட்டுக்கு எதிராகவும் நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காகவும் நான் மேற்கொண்ட அரசியல் தீர்வு அது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழித்தார். அத்துடன் என்னையும் சீரழித்தார். எனினும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு 3 வருடங்கள் மௌனமாக நான் அரசியலில் பயணித்தேன். 

முன்பு ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியே வர மௌனம் காத்தது போல் இந்த வேளையிலும் மௌனம் காக்க நேரிட்டது.

மஹிந்த ராஜபக்ஷவை நான் பிரதமராக நியமித்தமை அவசரமாக எடுத்த முடிவல்ல. ரணில் விக்கிரமசிங்க நாட்டையும் அழித்து அவரது கட்சியையும் அழித்து நல்லாட்சி அரசாங்கத்தை அழித்து என்னையும் அழித்தார் என்பதே உண்மை. இதற்கான ஒரே தீர்வு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விரட்டுவதே. அந்தச் சரியான தீர்மானத்தையே நான் எடுத்தேன்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி புதிய அனுபவம் ஒன்றல்ல. இதுபோன்று பல்வேறு நாடுகளிலும் நெருக்கடிகள், பாராளுமன்றத்தில் குழப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மனியில் ஆறு மாதம் அரசாங்கம் இருக்கவில்லை. இத்தாலியில் ஐந்து வாரம் அரசாங்கம் செயற்படவில்லை. அவுஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் அடைந்ததுடன் பாராளுமன்றம் செயற்படவில்லை. இத்தகைய அரசியல் நெருக்கடிகள் அரசியலில் புதியதொன்றல்ல. எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடுகளை எந்தக் கட்சி பாரபட்சமுமின்றி நான் நிராகரிக்கின்றேன்.

கடந்த மூன்று வாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் இடம்பெறுகின்றன. இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இடைக்கால தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. இது கொலை தொடர்பான வழக்கோ கொள்ளை தொடர்பான வழக்கோ பாலியல் துஷ்பிரயோக வழக்கோ கிடையாது. இது அரசியல் வழக்கு.

மக்கள் மத்தியில் இது தொடர்பில பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன. எனினும் நான் நீதிமன்றத்தை மதிக்கின்றேன். அதன் தீர்ப்புகளை கௌரவமாக ஏற்றுக்கொள்வேன், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.