Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

அழியாக்காதல்.........!!!!!! ஜிவிதன்

Currently online
பள்ளிக் காலத்தின்
பகல்வேளை ஒன்றில் 
பகையனுப்பிய கிபிர்
பலியெடுக்க வந்தவேளை
பதுங்குகுழி நோக்கி
பாய்ந்து செல்கையில் 
பாழாய்ப்போன வேர்தடுக்கி
பாதிவழியில் வீழ்ந்த என்னை
பக்குவமாய் கைபற்றி
பதுங்குகுழியில் சேர்த்தான்

பாடத்தில் சந்தேகம் 
பற்றி கதைத்தாலே
பழிக்கத் தொடங்குவர்
பள்ளியின் நண்பர்கள்.
பற்றிய கைகளை
பார்க்காமல் இருப்பாரோ?
பழிப்பும் தொடர்ந்தது
பார்வையும் தொடர்ந்தது
பட்டம் தெளித்ததன்
பலனாக அன்றுடன் 
பாசமும் நெஞ்சத்துள்
பரவியே தொடர்ந்தது

பகைவனின் கொட்டமும்
பல்கிப் பெருகிட
பள்ளி மாணவர்
படையினில் இணைந்தனர் 
பார்வையின் வழியே
பாசத்தில் பிணைந்த நாம்
பகையினை அழித்திட
படையினில் இணைந்தோம்

காலனை அழிப்பதில்
கவனமாய் இருந்ததால்,
காதலை மனதின்
கரையிலே வைத்தேன்.
காலப் பயணத்தில்
கடவுளின் கிருபையால்
காதலர் தினத்தினில்
கண்டேன் அவனை
களத்தின் நடுவிலே
கந்தகப்புகையிடை.

காதலர் தினத்தின்
காணிக்கையாக 
கயவர்கள் பலர்தலை
களைந்து போட்டேன்
கணவனாய் வரித்தவன்
காலடி தன்னில்

வெற்றியின் விளிம்பில்-பகை
வீசிய எறிகணை 
வீழ்ந்து வெடித்ததால்
வீர வேங்கையாய்
வீழ்ந்தேன் மண்ணில் 
வீரவணக்க கூட்டத்தின்போதே
விபரம் கிடைத்தது 
விதையாய் அவனும்
வீழ்ந்தது பற்றி

நாட்டின் விடிவிற்காய்
நம்மக்களின் வாழ்விற்காய்
நடுகல் ஆனதில்
நமக்கும் மகிழ்வே-ஆனால்
நப்பாசை ஒன்றேதான்
நம்மிருவர் நடுகற்கள் 
அருகருகே அமைந்தால்
நன்று என்பதே- நம்
நடுகற்கள் இடையே
நாற்பது தோழர்கள்

காதலர் தினத்திலே
கல்லறை கண்டநாம்
காதலர் தினம் பல
கடந்து விட்டோம் ஆனால் 
இந்த காதலர் தினம் 
நமக்கு சிறப்பே- ஆம்
இடித்து குவித்ததால்
நமது நடுகற்கள்
அருகருகே இன்று...
எனது நப்பாசை 
நனவாகிய பின்னரான
முதல் காதலர்தினம் இன்று.

கல்லறைக்காதலி

நன்றி 
ஜிவிதன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.