Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 23, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்!!

Currently online
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. 

முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. 

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் சென்னைக்கு எதிராக மோதுவது என்றாலே பெங்களூரு அணி வதங்கி போய் விடுகிறது. சென்னைக்கு எதிராக இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ள பெங்களூரு அணி அதில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 14-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அதுவும் சென்னை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் பெங்களூரு அணியினர் ஆயத்தமாகியுள்ளனர்.

சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூரு கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் உள்ளனர். ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ரெய்னாவுக்கு 15 ரன் தேவைப்படுகிறது. 52 ரன்கள் எடுத்தால் கோலி இந்த இலக்கை அடைவார்.

பொதுவாக சேப்பாக்கம் ஆடுகளம் வேகம் குறைவாக இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.

பெங்களூரு: பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.

இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.