
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது அப்துல் மஜீத்(22) என்பவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருப்பதை கண்டு அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, அவர் வைத்திருந்த அட்டைபெட்டி ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தபோது, அதில் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்தன.
இதுகுறித்து மத்திய வனத்துறை அதிகாரிகளுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாம்பு உள்ளிட்ட 34 வகையான கொடிய உயிரினங்களை அதிகாரிகள் மீட்டனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் என்று சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி மாணவர் முகமது அப்துல் மஜீத்தை கைது செய்த அதிகாரிகள், அவர் யாருக்காக உயிரினங்களை கடத்தி வந்தார் என்று விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் கொடிய உயிரினங்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.