Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட் ; டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி !!

Currently online
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந் நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் டிரென்ட் பவுல்டுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகமாக ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஆடிய பிரித்வி ஷா, ஷர்துல் தாகூரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 24 ரன்களில் (16 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவேவில்லை.

சென்னை வீரர்கள் பந்து வீச்சில் கொடுத்த குடைச்சலில் டெல்லி அணியின் ஸ்கோர் மந்தமானது. முதல் 9 ஓவர்களில் அந்த அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் (20 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நுழைந்த இளம் புயல் ரிஷாப் பான்ட் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரிஷாப் பான்ட் 25 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராவோவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த காலின் இங்ராமும் (2 ரன்) அதே ஓவரில் காலியானார். மறுமுனையில் தனது 33-வது அரைசதத்தை கடந்த ஷிகர் தவான் 51 ரன்களில் (47 பந்து, 7 பவுண்டரி) பிராவோவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இதற்கிடையே கீமோ பால் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். 7 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் டெல்லி அணி இறுதி கட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. 150 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கு முன்பாகவே அடங்கிப்போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 

பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. அம்பத்தி ராயுடு 5 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ஷேன் வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் ரெய்னா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்டு மிரட்டினார். இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடாவுடன் களத்தில் வாக்குவாதம், உரசலில் ஈடுபட்டு சூடு கிளப்பிய வாட்சன், அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் அட்டகாசமாக 2 சிக்சர்களை விரட்டியடித்தார். வாட்சன் 44 ரன்களும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரெய்னா 30 ரன்களும் (16 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தனர்.

இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஜாதவ் 27 ரன்களில் (34 பந்து) கேட்ச் ஆனார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 32 ரன்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிராவோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டம் முடிந்ததும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.